Sunday, February 20, 2011

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் #tnfisherman

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து கொல்லப்படுவது/தாக்கப்படுவது குறித்து, இணையத்தில் இணையப் பயனாளர்களால் முன்னெடுக்கப்பட்ட #tnfisherman campaign, இணையம் கடந்து மற்ற வழிமுறைகளையும் மேற்கொள்கின்றது. 30/01/2011 அன்று சென்னை கடற்கரையில் நடந்த முதல் சந்திப்புக்குப் பிறகு அரசியல் தலைவர்களையும், மீனவர் பிரதிநிதிகளையும் சந்திக்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. சந்திப்பில் பேசப்பட்டதாக பதிவான முக்கியமான நடவடிக்கை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதிகளுக்கு இணையப் பயனர்கள் நேரில் சென்று மீனவ கிராமங்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி தகவல்களை ஆவணப்படுத்துவது.


கணிசமான எண்ணிக்கையில் இணையப் பயனர்கள் நேரில் சென்று நிலவரங்களை அறிந்து

  • வலைப்பதிவுகளாகவும்
  • டுவீட்டுகளாகவும்
  • ஃபேஸ்புக்கிலும் தகவல்களாகவும்
  • கூகுள் பஸ் உரையாடல்களாகவும்
  • யூடியூப் காணொலிகளாகவும்
  • ஒளிப்படங்களாகவும்

இணையத்தில் வெளியிடுவதன் மூலம் தகவல்களை ஆவணப்படுத்துவதோடு
குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் நாம் ஏற்படுத்த முடியும்.



இது தொடர்பாக ஒரு குழுவாக நாகப்பட்டிணம், வேதாரண்யம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாட்கள் : மார்ச் 4,5,6 மற்றும் 7

நான்கு நாட்களும் பங்கெடுக்க இயன்றவர்கள் பங்கெடுக்கலாம். ஓரிரு நாட்கள் மட்டும் பங்கெடுக்க இயன்றவர்களும் பங்கெடுக்கலாம். முதல் இரண்டு நாட்கள் நாகப்பட்டிணம்/வேதாரண்யம் பகுதிகளிலும், அடுத்த இரண்டு நாட்கள் ராமேஸ்வரம் பகுதியிலும் பயணமிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் இரண்டு நாட்களில் காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை போன்ற நாகை/வேதை பகுதிகளிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் இருக்கும் பதிவர்கள் கலந்து கொள்வது மிகவும் பயனளிக்கும். அடுத்த இரண்டு நாட்களில் ராமநாதபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பதிவர்கள் பங்கெடுக்கலாம்.

இந்தப் பயணத் திட்டத்தில் இன்னும் பலர் கலந்து கொள்ளச் செய்ய, பயணத்திட்டத்தை நமது வலைப்பதிவுகள், டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும்தொடர்புகளுக்கு மின்னஞ்சல் மூலம் இன்னும் பரவலாக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழக மீனவர்கள் தொடர்பான கருத்துகள் பகிரப்படும் கூகிள் மின்குழுமத்தில் இணைவதன் மூலம் மேலும் பல தகவல்களை அறிய முடியும்.

மீனவர் பிரச்னைக்கு அதரவு அளித்தவர்களின் பேட்டிகள், இப்பிரச்னை தொடர்பாக வெளிவரும் சிறப்பான கட்டுரைகள் யாவும்www.savetnfishermen.org தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இன்றிருக்கும் ஊடகங்கள் பலவும், மீனவச் சகோதர்கள் படும் இன்னல்களை வெளிக்கொணர மறுக்கின்றனர். இந்நிலையில், மாற்று ஊடகமாகக் கருதப்படும் இணையத்தின் மூலம் அனைத்து அவலங்களையும் பதிவு செய்வது அவசியமாகின்றது. நம் சகோதரர்களின் துயரங்களை வெளியுலகுக்கு எடுத்துச் சொல்வதற்காக ஓரிரு நாட்களை ஒதுக்குவோம்; நம் பங்களிப்பை அழுத்தமாக எடுத்து வைப்போம்.

ஏற்கனவே பதிவர் மா.சிவகுமார் இது பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். மற்ற பதிவர்களும் இதனை வெளியிட்டு பங்கெடுப்பை முன்னெடுக்க வேண்டுகின்றோம்